search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை ஐகோர்ட்"

    • வழக்கு தாக்கல் செய்வதற்கும் ஆன்லைன் வசதிகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • மதுரை ஐகோர்ட்டில் பெரும்பாலான வழக்குகளின் விசாரணை வீடியோ கான்பரன்ஸ் முறையிலேயே இன்று நடைபெறுகிறது.

    மதுரை:

    கொரோனா பரவல் கடந்த 2 வாரங்களாக நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், ஐகோர்ட்டுகளில் வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகளை விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் கடந்த வாரம் உத்தரவிட்டார்.

    அதன்படி சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளில் இன்று (10-ந் தேதி) முதல் வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவித்து உள்ளது.

    நேரடியாக வழக்குகள் விசாரணை நடந்தாலும், வக்கீல்கள் சங்கங்களை சேர்ந்தவர்கள், பொதுநல வழக்குகளை தொடுத்து நேரடியாக ஆஜராகுபவர்கள் உள்ளிட்டவர்கள் முடிந்தவரை கொரோனா தொற்றை தடுக்கும் வகையிலும், கோர்ட்டு அறைகளில் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் வகையிலும் வீடியோ கான்பரன்ஸ் முறையை பயன்படுத்த வேண்டும் என்றும் ஐகோர்ட்டு பதிவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    அதே போல் வழக்கு தாக்கல் செய்வதற்கும் ஆன்லைன் வசதிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மதுரை ஐகோர்ட்டில் பெரும்பாலான வழக்குகளின் விசாரணை வீடியோ கான்பரன்ஸ் முறையிலேயே இன்று நடைபெற்றது.

    • தாமரை செடிகள் குளங்களை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்தால் நீர் கெட்டுவிடும் என்பதற்கு ஏதேனும் அறிவியல் ரீதியான சான்றுகள் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
    • மனு குறித்து அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிராமத்தில், கல்குளம், வண்ணான்குளம் என பல்வேறு குளங்கள் உள்ளன. இங்கு மழைக்காலங்களில் நீரை தேக்கி எங்கள் பகுதி கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த குளங்கள் சுற்று வட்டாரத்திற்கும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    இந்நிலையில் தற்போது குளங்களில் ஆகாய தாமரை செடிகள் அதிகம் வளர்ந்துள்ளது. இதன் காரணமாக குளத்து தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    குளத்தில் இருக்கக்கூடிய தாமரை செடிகளை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே கல்குளம் மற்றும் வண்ணான் குளம் ஆக்கிரமித்துள்ள தாமரை செடிகளை அகற்ற உரிய நடவடிக்கை உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் குளங்களில் தாமரை செடிகள் ஆக்கிரமிப்பு செய்து உள்ள புகைப்படங்களை சமர்ப்பித்தார்.

    இதனைப் பார்த்த நீதிபதிகள் தாமரை செடிகள் குளங்களை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்தால் நீர் கெட்டுவிடும் என்பதற்கு ஏதேனும் அறிவியல் ரீதியான சான்றுகள் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். பின்னர் மனு குறித்து அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    • வீரிருப்பு பகுதியில் விதிமுறைகளை பின்பற்றாமல் பெட்ரோல் பங்க் நடத்த அனுமதி கேட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது
    • இடவசதிகள், பாதுகாப்பு காரணங்கள் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்பட வேண்டும்.

    மதுரை:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலு காவை சேர்ந்தவர் சக்கர வர்த்தி. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சங்கரன் கோவில் தாலுகா வீரிருப்பு கிராமத்தில் பெட்ரோல் பங்க் நடத்து வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் நெடுஞ்சாலைத் துறையினர் சார்பில் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்தேன். அதை நிராகரித்தனர். எனக்கு தடையில்லா சான்று வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு தனி நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்ததற்காக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்கும் காரணங்கள் ஏற்புடையதல்ல. அதிகாரிகள் நிராகரித்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. உடனடியாக மனுதாரருக்கு தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, பெட்ரோலிய துறையானது மத்திய அரசின் வசம் உள்ளது. ஆனால் இடவசதிகள், பாதுகாப்பு காரணங்கள் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தடையில்லா சான்றை மாநில அரசின் வருவாய்த் துறை மற்றும் தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத்துறையினரிடம் பெற வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் உள்ளன.

    அந்த வகையில் வீரிருப்பு பகுதியில் விதிமுறைகளை பின்பற்றாமல் பெட்ரோல் பங்க் நடத்த அனுமதி கேட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தர வுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

    • மனு மீதான விசாரணை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு வந்தது.
    • எதிர்காலங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் ஏழுமலை கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நட்டாத்தி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவிக்கையில், மதுரை மாவட்டம் ஏழுமலை கிராமத்தில் குறிப்பிட்ட ஆக்கிரமிப்பை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்து 8 வாரத்திற்குள் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட்டிருந்தும், ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த வழக்கு குறித்து அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பின்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதன் பின்பு தான் ஆக்கிரமிப்பு தற்போது அகற்றப்பட்டுள்ளது.

    தொடர்ச்சியாக இத்தகைய நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இது ஆரோக்கியமான போக்கு இல்லை. எதிர்காலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் வழக்குகளில் அதிகாரிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இந்த வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரசாந்த்குமார் உம்ராவ் ஒரு வழக்கறிஞர். ஏன் இதுபோன்ற வீடியோவை பார்வர்ட் செய்தார்? இதன் தீவிரத்தன்மை அவருக்கு தெரியாதா?
    • ஒவ்வொரு நபருக்கும் சமூக பொறுப்பு இருக்க வேண்டும் என கூறிய நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைப்பதாக கூறினார்.

    மதுரை:

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

    இது தொடர்பாக தமிழக போலீசார் விசாரணை நடத்தியதில், வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்தி வீடியோவை வெளியிட்டது டெல்லியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் பிரசாந்த்குமார் உம்ராவ் என தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க பிரசாந்த்குமார் உம்ராவ் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அதில், நான் டெல்லியில் பா.ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகராக உள்ளேன். டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறேன். குறிப்பிட்ட வீடியோவை நான் தயாரிக்கவில்லை. எனக்கு வந்த வீடியோவை பார்வர்ட் மட்டும் செய்தேன். இதில் எந்தவித உட்கருத்தும் இல்லை.

    ஆனால் நான் அரசியல் கட்சியில் இருப்பதால் பழிவாங்கும் நோக்கோடு என்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பிரசாந்த்குமார் உம்ராவ் வெளியிட்ட வீடியோவால் தமிழகத்தில் அசாதாரண சூழல் உருவானது.

    இருமாநில தொழிலாளர்களுக்கு இடையில் பிரச்சினை உருவாக்கும் விதமாக இவர் டுவிட் செய்துள்ளார். இது இவரின் முதல் டுவிட் கிடையாது. இது போன்ற பல சட்ட விரோதமான பொய்யான தகவல்களை டுவிட் செய்துள்ளார். எனவே இவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நீதிபதி கூறுகையில், பிரசாந்த்குமார் உம்ராவ் ஒரு வழக்கறிஞர். ஏன் இதுபோன்ற வீடியோவை பார்வர்ட் செய்தார்? இதன் தீவிரத்தன்மை அவருக்கு தெரியாதா? இதனால் எவ்வளவு பிரச்சினை ஏற்படும்? அவர் எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும். சமூக பொறுப்பு அவருக்கு இல்லையா? என கேள்வி எழுப்பினர்.

    தொடர்ந்து ஒவ்வொரு நபருக்கும் சமூக பொறுப்பு இருக்க வேண்டும் என கூறிய நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைப்பதாக கூறினார்.

    • 34 மாநகராட்சி கடைகள் ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்த அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
    • திண்டுக்கல் மாநகராட்சி கடை ஏல அறிவிப்பில் ஊழல் நடந்தது உறுதி செய்யப்பட்டால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட நேரிடும்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனபாலன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-

    நான் திண்டுக்கல் மாநகராட்சி உறுப்பினராக உள்ளேன். திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் காமராஜர் பஸ் நிலையத்தில் அமைந்துள்ள 34 கடைகள் வாடகைக்கு விடுவதற்கான ஏல அறிவிப்பை நடத்துவதற்கான மாநகராட்சி கூட்டம் கடந்தாண்டு நவம்பர் 17-ந் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் 34 கடைகளுக்கான ஏலம் நடந்தது.

    இதில் மொத்தமாக 47 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். தமிழ்நாடு வெளிப்படை தன்மை ஏல அறிவிப்புச் சட்டத்தின் படி ஏலம் நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு உள்ளூர் அல்லது மாவட்ட அளவிலான செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்திருக்க வேண்டும். அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ளும்படி ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த ஏலம் அவ்வாறு நடைபெற வில்லை.

    எனவே திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்தில் அமைந்துள்ள 34 மாநகராட்சி கடைகள் ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்த அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து மீண்டும் ஏல அறிவிப்பை முறையாக வெளியிட்டு முறையாக ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் திண்டுக்கல் மாநகராட்சி கடைகளுக்கான ஏல அறிவிப்பில் விதி முறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்ததாவது:

    திண்டுக்கல் மாநகராட்சி 34 கடைகளுக்கான ஏலத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. தமிழ்நாடு ஏல அறிவிப்புச் சட்டம் முறையாக பின்பற்றப்படவில்லை. பொதுமக்களின் பணம் வீணாக செலவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி கடை ஏல அறிவிப்பில் ஊழல் நடந்தது உறுதி செய்யப்பட்டால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட நேரிடும்.

    திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான 34 கடைகளில் ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்ப ட்டவர்களுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. ஏல அறிவிப்பின் கீழ் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும்.

    திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் மாநகராட்சி கடைகள் ஏலம் குறித்து வருகிற 23-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    • குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரபு, ஜெயபாலன் ஆகியோரை தமிழக அரசு அர்ச்சகர்களாக நியமித்தது.
    • தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் பல அர்ச்சகர்கள் சம்பளம் பெறாமலேயே, கோவில்களில் தங்களின் பணியை செய்து வருகின்றனர்.

    மதுரை:

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில், தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின்கீழ் ஜெயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக நியமித்து உத்தரவிடப்பட்டது.

    இதை ரத்து செய்து, அந்த கோவிலில் நீண்ட காலமாக பணியாற்றும் தங்களை அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி கார்த்திக், பரமேசுவரன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஜெயபாலன், பிரபு ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல், ஜெயபாலன், பிரபு ஆகியோர் 2021-ம் ஆண்டிலேயே அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்களின் நியமனத்துக்கு எதிராக 2022-ம் ஆண்டில்தான் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். இது ஏற்புடையதல்ல என்று வாதாடினார். முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரபு, ஜெயபாலன் ஆகியோரை தமிழக அரசு அர்ச்சகர்களாக நியமித்தது. இந்த நியமனம் குறித்து மனுதாரர்கள் கேள்வி எழுப்பி இந்த வழக்கை தொடர்ந்து உள்ளனர். மனுதாரர்களும் அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் அவர்கள் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.

    இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர்கள் பல ஆண்டுகளாக அர்ச்சகர்களாக கோவிலில் பணியாற்றி உள்ளனர். அவர்களை முறைப்படி அர்ச்சகராக கோவில் அறங்காவலர் நியமிக்கவில்லை. தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் பல அர்ச்சகர்கள் சம்பளம் பெறாமலேயே, கோவில்களில் தங்களின் பணியை செய்து வருகின்றனர். அந்த வகையில், ஆகம விதிகளுக்கு எதிராக குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற அர்ச்சகர் நியமன உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த கோவிலில் அர்ச்சகர்களாக பல ஆண்டுகளாக பணியாற்றிய, மனுதாரர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது தொடர்பாக கோவிலின் அறங்காவலர் 8 வாரத்தில் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • குறிப்பிட்ட சிலரை மட்டும் பணிக்கு நியமித்து உத்தரவிட்டு உள்ளனர்.
    • பணி நியமனங்களை ரத்து செய்துவிட்டு நேர்முக தேர்வு நடத்தி விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிதாக பணி நியமனங்களை மேற்கொள்ளும்படி உத்தரவிட வேண்டும்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை சேர்ந்த நித்யா. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

    கடந்த 9.9.2022 அன்று குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உதவியாளர் பணி நியமனம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பின்படி நான் அந்த பணிக்கு விண்ணப்பித்து இருந்தேன்.

    அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி நேர்முகத் தேர்வுக்காக அழைத்திருந்தனர். குஜிலியம்பாறை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நான் கல்வி சான்றிதழ்களுடன் சென்றிருந்தேன். என்னுடைய கல்வி சான்றிதழ்களை அங்கு பெற்றுக் கொண்டனர். என்னை போலவே அங்கு வந்த பலரிடமும் நேர்முகத் தேர்வை நடத்தாமல் சான்றிதழ்களை மட்டும் பெற்றுக் கொண்டனர்.

    பின்னர் குறிப்பிட்ட சிலரை மட்டும் அந்த பணிக்கு நியமித்து உத்தரவிட்டு உள்ளனர். நேர்முக் தேர்வே நடத்தாமல் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணி நியமனம் அளித்து இருப்பது ஏற்புடையதல்ல.

    எனவே அந்தப் பணி நியமனங்களை ரத்து செய்துவிட்டு நேர்முக தேர்வு நடத்தி விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிதாக பணி நியமனங்களை மேற்கொள்ளும்படி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் சுந்தர் ஆஜராகி, விண்ணப்பித்தவர்களுக்கு உரிய முறையில் தேர்வு நடத்தாமல் முறை கேடாக பணி நியமனம் அளித்திருப்பது சட்ட விரோதம். அந்த பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

    விசாரணை முடிவில் மனுதாரரின் மனுவை பரிசீலித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் அனைத்து கோவில்கள் மற்றும் தனியாரிடம் வளர்க்கப்படும் யானைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
    • இனிவரும் நாட்களில் எந்த யானையும் வளர்ப்பு யானையாக மாற்றப்படக்கூடாது என்ற ஐகோர்ட்டின் உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சேக்முகமதுவுக்கு சொந்தமானது 56 வயதான லலிதா என்ற பெண் யானை. இந்த யானையின் பராமரிப்பு குறித்து வனத்துறையினர் மதுரைக்கிளையில் வழக்கை தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி யானையை பாகனிடம் இருந்து பிரித்து அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும், யானை தொடர்ந்து பாகனின் பராமரிப்பிலேயே இருக்கட்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக கோவில் விழா ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்ட போது யானைக்கு காயம் ஏற்பட்டது.

    இது தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த உத்தரவில் தெரிவித்ததாவது:-

    லலிதா யானைக்கு உரிமை கோரிய வழக்கில் யானையை பாகனிடம் இருந்து பிரிக்க வேண்டாம் என்றும், யானையை முறையாக பராமரித்து அது தொடர்பான அறிக்கையை குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுப்புமாறும் உத்தரவிட்டிருந்தார்.

    யானை பராமரிப்பு குறித்து அறிக்கை அளிக்கப்பட்ட நிலையிலும், யானைக்கு காயம் ஏற்பட்டது தொடர்பாக அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மருத்துவர் கலைவாணனை லலிதா யானை பராமரிப்பிற்கான சிறப்பு பணிக்காக ஒதுக்க வேண்டும். யானையின் உடல்நிலை குறித்து மருத்துவர் கலைவாணன் விரிவான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். முறையான சிகிச்சையும், உணவும் யானைக்கு வழங்கப்பட வேண்டும்.

    லலிதா யானைக்கு 60 வயது இருக்கக்கூடும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், இனிவரும் காலங்களில் சரியான உணவு, பராமரிப்பு வழங்கி ஓய்வு எடுக்க செய்ய வேண்டும். லலிதா யானையை எந்தவிதமான வேலைகளிலும் ஈடுபடுத்த கூடாது. ஏற்கனவே உயர்நீதிமன்றம் எந்த யானையையும் இனிமேல் வளர்ப்பு யானையாக மாற்ற கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தற்போது பல இடங்களில் யானைகளுக்கு முறையான வசதிகள் செய்து தரப்படுவதில்லை. பாகன்கள் குடித்துவிட்டு யானையை துன்புறுத்தும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இதன் காரணமாக சில சமயங்களில் யானை ஆக்ரோஷமாக மாறி பாகன்களை தாக்கும் சூழல் ஏற்படுகிறது.

    ஆகவே சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் அனைத்து கோவில்கள் மற்றும் தனியாரிடம் வளர்க்கப்படும் யானைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இனிவரும் நாட்களில் எந்த யானையும் வளர்ப்பு யானையாக மாற்றப்படக்கூடாது என்ற ஐகோர்ட்டின் உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    கோவில்களில் வளர்க்கப்படும் யானைகள் அரசு மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட வேண்டுமா? என்பது குறித்து முடிவு செய்ய இதுவே சரியான நேரம். ஆகவே அது தொடர்பாக ஆலோசித்து அதன் அடிப்படையில் அனைத்து கோவில்களுக்கும் உத்தரவுகள் வழங்கப்பட வேண்டும். எல்சா பவுண்டேஷனின் தரப்பில் திருப்பத்தூர், சேலம் மாவட்டங்கள் யானைகள் மறுவாழ்வு முகாம் அமைப்பதற்கு தகுந்த இடங்களாக உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் திருச்சி எம்.ஆர். பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாம் அமைக்க உகந்த இடமில்லை எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆகவே இது தொடர்பாகவும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் பரிசீலிக்க வேண்டும்.

    இவ்வாறு உத்தரவிட்டு நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

    • தனியார் பஸ்கள் அரசால் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்க உத்தரவிட வேண்டும்.
    • மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி கணேஷ் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மதுரை:

    நாமக்கல்லை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் திருச்சியில் இருந்து பாளையம் என்ற ஊருக்கு அனுமதி பெற்று தனியார் பஸ்சை இயக்கி வருகிறேன். எனது பஸ், திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மதியம் 3.24 மணிக்கு புறப்பட தமிழக அரசு போக்குவரத்து கழகம் நேரம் ஒதுக்கி உள்ளது.

    இதேபோல் எனக்கு அடுத்து திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கரூருக்கு செல்ல வேண்டிய தனியார் பஸ் மதியம் 3.55 மணிக்கு புறப்பட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே 3.14 மணிக்கு இயக்கப்படுவதால் எனக்கும், மற்ற அரசு பஸ்களுக்கும் 17 ஆண்டுகளாக வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே தனியார் பஸ்கள் அரசால் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி, மனுதாரர் கூறிய குற்றச்சாட்டு ஆவணங்களின்படி சரியாக உள்ளதால் தனியார் பஸ்களை உரிய நேரத்தில் இயக்க வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கரூரைச் சேர்ந்த மற்றொரு பஸ் உரிமையாளர் சுவாமி அப்பன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என திருச்சி மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

    நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை தனியார் பஸ் இயக்கும் நேரத்தை முறைப்படுத்தாத திருச்சி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும்படி கார்த்திகேயராஜா மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் குறிப்பிடும் தனியார் பஸ் நேரத்தை மாற்றி முன்னதாக இயக்கப்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மேலும் மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி கணேஷ் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    பின்னர் திருச்சி மாவட்ட மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கணேஷ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2020-ம் ஆண்டு முதல் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய ஒரு பிரிவினர் இந்த கோவிலில் எங்களை வழிபாடு செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.
    • பட்டியல் வகுப்பைச் சார்ந்த எங்களை கோவிலில் வழிபட அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த மேடையாண்டி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவில், மாதரசி அம்மன் கோவில் மற்றும் மேடையாண்டி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதனை குலதெய்வ கோவிலாகக் கொண்டுள்ள நாங்கள் வழிவழியாக வழிபட்டு வருகின்றோம்.

    இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய ஒரு பிரிவினர் இந்த கோவிலில் எங்களை வழிபாடு செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். மேலும் அந்த கோவிலை உரிமை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும்.

    எனவே இந்த வருடம் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டு பூஜை செய்து வழிபாடு செய்ய எங்களுக்கு அனுமதி வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் மனு தாக்கல் செய்திருந்தோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே பட்டியல் வகுப்பைச் சார்ந்த எங்களை கோவிலில் வழிபட அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

    இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், கோவில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது. அனைவரையும் சமமாக ஒரே மாதிரியாக நடத்த வேண்டும். அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் வழிபாடு நடத்துவதை மாவட்ட நிர்வாகம், காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை பிப்ரவரி 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எல்லையோர மாவட்டங்களில் உள்ள இந்த வழித்தடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டுகிறது.
    • கடந்த ஆண்டு தென்காசி மாவட்டத்தில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    மதுரை:

    தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிதம்பரம் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகள் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொட்டப்படுகின்றன. இதை தடுக்க வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டில் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது அப்போதைய நெல்லை மாவட்ட கலெக்டர் சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    அதில் நெல்லை மாவட்ட கலெக்டர் தலைமையில் சுகாதாரத்துறை, காவல்துறை, போக்குவரத்து துறையின் அலுவலர்களை இணைத்து மருத்துவ கழிவுகள் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு மருத்துவ கழிவுகள் நெல்லை, தென்காசி மாவட்டத்திற்குள் நுழையாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என கூறப்பட்டு இருந்தது.

    இதை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட்டு, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது. ஆனால் கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகளை தென்காசி மாவட்ட எல்லைகளில் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, மாநில எல்லையோர மக்களுக்கு பல்வேறு அசவுகரியங்கள் ஏற்படுகின்றன. எனவே கேரள மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதி பதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக சுகாதாரத்துறையின் முதன்மை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி பிற பகுதிகளில் இருந்து பல்வேறு இடங்களில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவதை தடுக்க அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.எல்லையோர மாவட்டங்களில் உள்ள இந்த வழித்தடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டுகிறது.

    கடந்த ஆண்டு தென்காசி மாவட்டத்தில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அங்கு தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என கூறப்பட்டிருந்தது.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் பிற மாநில மருத்துவ கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

    ×